Thursday, March 20, 2014

வசி...வசதி...அவதி

பெங்களூர்.
இன்றைய தேதி 20-மார்ச்-2014, நான் அறிந்த வரையில், ஒரு அடுக்கு மாடி குடி இருப்பிற்கு கொடுக்கப் படும் அதிக பட்ச வாடகை 40000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
குறைந்த பட்ச வாடகை 9000/- ஒரு சில பகுதிகளில் இன்னும் சற்றே குறைவாக இருக்கலாம். இது மட்டுமல்லாது பராமரிப்புக் கட்டணம் தனி.

அவரவர் வசதிக்கேற்ப சொகுசு வாழ்க்கை விற்பனைக்கு உள்ளது.
இந்திய பொருளாதாரமே உலகத்தின் சிறந்த பொருளாதாரம் என்று வர்த்தக மேதைகள் போற்றி உள்ளனர்.
-இதற்கான  தாரக மந்திரம் "சேமித்தது போக செலவு செய்" - இந்தியாவின் முதுகெலும்பு, நமது மக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ளது.

அதனால்தான் அனைவரும் பணத்தை தங்கத்தை வெள்ளியை, வைரத்தை, சொத்தை பதுக்குகின்றனர்.

அறியாமையும் சோம்பலும் புகுந்த கூட்டில் தெரியாமல் தோன்றுமே நோய் என்ற வள்ளுவரின் வாக்கு பிரதிபலிப்பதை எங்கும் காணலாம்.

ஒரு மென் தொழில்நுட்ப ஊழியரின் வங்கிக் கணக்கை நோக்கினால், வரிப்பணம், செலவு, ஆடம்பரம் மற்றும் இதர செலவுகள் போக மீதம் உள்ள தொகை சொற்பமே...

அனுபவித்து ஆண்ட வாழ்கையில் திருமணம் ஒரு திருப்பு  திருப்புகிறது....அவருடைய ஆசை கோபம் தாபங்கள் அனைத்தும் மாறி சேர்த்து வைக்க முனைகிறார்... (நான் இருபாலரையும் சாடுவதால் பன்மையில் அழைக்கிறேன்).

வாழ்க்கைத் துணையும் பெரும்பாலும்  ஒரே துறையில் இருப்பதால், பணப் புலக்கதிற்கும் சேமிப்பிற்கும் பங்கம் இல்லை.
வீடு வாசல் உரிமை கொண்டாடும் வெறித்தாண்டவம் ஆரம்பமாகிறது...
விளைவு நாற்பது லட்சம் கடன் வாங்கி அதனை முப்பத்தி ஆறு வருடம் என்பது லட்சமாக திருப்பி செலுத்துகின்றனர்.

நகரங்களில் வாழும் பெரும்பான்மை தம்பதியினர் மேற்கண்ட பிரிவில் உள்ளனர்.

ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு இன்னும் இதர பல உயர்வுகள் வீட்டுக் கடனை குறைந்த காலத்தில் முடிக்க உதவுகின்றது...
இங்கே மனிதனின் பேராசை ஆரம்பமாகிறது... அடுத்த முதலீட்டை ஆரம்பிக்கிறார்... தங்கம் வெள்ளி, வைரம், வீட்டு மனை அல்லது இரண்டாவது சொந்த வீடு.. என்று வாய்ப்புகளுக்கு குறைவே இல்லை.

என் படிப்பு,
என் வாய்ப்பு,
என் சம்பளம்,
நான் செலவு செய்கிறேன்...
இதை விமர்சனம் செய்ய நீ யார் என்று கேட்டால்,  என் பதில் பின்வருமாறு

சமீப காலத்தில் தாறுமாறாக உருளும் பணச்சரிவிற்கு காரணம் ஆயிரம் இருக்கலாம். அதில் மிகப் பெரிய ஒன்று நகர மக்களின் அசையாத சொத்துக் குவிப்பு.

நகர்புற வாசிகள், தற்சமயம் நகரின் ஓரப் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளிலோ, அல்லது நகரின் வெளியே எழும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலோ, மிகக் குறைந்த விலையில் முதலீடு செய்கின்றனர். கண்டிப்பாக ஒரு சில வருடங்களில், முதலீட்டின் லாபம் முதலீட்டை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், பெருகி வரும் நகரமயமாகலும், மக்களின் பாதுகாப்பான முதலீட்டு பயமும்தான்.

ரத்தினச் சுருக்கமாக சொன்னால், எழுந்து நிற்கும் ஒவ்வொரு அடுக்கு மாடி கட்டிடமும், இந்திய பணவீக்கத்தின் அடையாளமே.

முடியும் என்பதற்காக சொத்துக்களை குவிப்பது,  நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளை அடிப்பதற்கு சமம்.

ஒரு  பகுதியில் குடியிருப்புகளின் விலை மதிப்பைப் பொறுத்தே, வீட்டு வாடகை நிர்ணயிக்கப் படுகிறது.

மேற்கண்ட சொத்துக் குவிப்புகளினால், குடியிருப்புகளின் தேவை அதிகமாகிறது, அதனால் விலை ஏறுகிறது, வாடகையும் விண்ணைத் தொடுகிறது.

வசிப்பதற்காக குடியிருப்பு ஒன்றை கட்டுங்கள், வாங்குங்கள்... ஆனால், முதலீடு செய்யாதீர்கள்...

உங்கள் முதலீடு இன்னொரு நடுத்தர குடும்பத்தினை பாதிக்க வேண்டாமே?...
 

-நான் நாட்டின் மேல் அக்கறை உள்ள குடிமகன்.  

No comments: