சேட்டு


நாம் எத்தனையோ படங்கள்ல சின்ன பசங்க கஷ்டப் படுறத பாத்து இருக்கோம்... பட் ஒரு பத்து நிமிஷம் ஒதுக்கி, அவங்க பக்கத்துல உட்காந்து, அவங்களுக்கு என்ன வேணும்ன்னு கேட்டது இல்ல. இன்க்ளுடிங்  மீ.
சமீபத்துல, என்னோட ரொம்ப நெருங்கிய உறவினரோட கதைய கேட்க நேரிட்டது.. அதனோட விளைவுதான். இந்த ஸ்டோரி.


சேலம் அரிசிப் பாளையம் அருகே ஒரு சிறிய குடும்பம்.
அப்பா லாரி ஓட்டுவாரு. அம்மா வீட்டோட தான். ஒரு பொண்ணு, மூனு பசங்க. இது கொஞ்சம் பழைய கதை. நடந்து ஒரு நாப்பது வருஷம் இருக்கும்.

அப்பா கொஞ்சமாதான் படிச்சு இருந்தாரு. பசங்களையும் அவ்வளவா படிக்க சொல்லி வற்புறுத்தல.
பெரிய பையன் கஷ்டப் பட்டு எட்டாவது வரைக்கும் படிச்சான். அப்புறம் வண்டி ஓட்டக் கத்துக்கறேன்-ன்னு ட்ராவல்ஸ் பக்கம் போய்ட்டான்.

ரெண்டாவது பையன் நாலாவது கூட படிக்கல. அந்த பையன் பேருதான் சேட்டு. அவங்க அப்பா அம்மா வச்ச பேரு வேற. ஆனா. அரிசிப் பாளையம் ஏரியால போயி நீங்க சேட்டு-ன்னு சொன்னதான் தெரியும்.

மூணாவது பையனும் அவ்வளவா படிக்கல. எந்த வீட்டுலயும் கடைசி குழந்தைக்குச்  செல்லம் அதிகம்... அதுக்கு இவனும் விதி விளக்கு இல்ல. படிக்கவே இல்லன்னாலும், சும்மாவே சுத்திட்டு இருப்பான்.
அடியும் விழாது. அவனை கேட்கறதுக்கு ஆளும் கிடையாது.

நம்ம சேட்டு, நாலாவது படிக்கும் போது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.
அந்த குண்டி டீச்சர் ரொம்ப கோவக்கார டீச்சர்.
எல்லா பசங்களையும் போட்டு அடிக்கறதே அவளுக்கு வேலை.
நம்ம சேட்டு ரொம்ப நாளா தப்பிசுகிட்டே வந்தான்.
அன்னிக்கு ஏதோ குறும்பு பண்ணினான்-ன்னு அவனை அடிக்கறதுக்கு, கையை நீட்டச் சொன்னாங்க.

இவன் பயந்துகிட்டே கைய வயித்துக்கு பக்கத்துல வச்சுகிட்டே நீட்டினான். அந்த அறிவுள்ள டீச்சர் ஓங்கி அடிக்க, சேட்டு கைய இன்னும் உள்ளே இழுத்தான். பிறப்புறுப்பின் மேல அடி விழுந்துடுச்சு. 

அது தான் அவன் ஸ்கூல்-க்கு போன கடைசி நாளு. கொஞ்ச நாள் வலி இருந்தது, அப்புறம் சரியாயிடுச்சு. பதினைஞ்சு இருவது வருஷம் கழிச்சு தான், அந்த அடி அவனுக்கு பிரச்சனைய கொடுத்தது. யூரின் டியுப் ல சதை வளர்ந்து, அதை ஆபரேஷன் செஞ்சு கிளியர் பண்ணினாங்க.

ஒரு வருஷம் நம்ம சேட்டுவும் வீட்டுல விளையாண்டுகிட்டு இருந்தான்.
பையனுக்கு ஒன்பது வயசு ஆயிடுச்சு. அவனை இப்போல இருந்தே பட்டறைக்கு அனுப்பிச்சாதான், உருப்பிடியா ஒரு தொழில கத்துக்குவான்-ன்னு ஒரு வீணாப் போன பிரண்ட் அப்பாகிட்டே சொன்னான். 

சரி-ன்னு அப்பாவும், சேட்டை பட்டறைக்கு அனுப்பினாரு. பின்னாடி, நம்ம பையன் ஒரு பெரிய பைக் மெக்கானிக்கா வருவான்னு நினைச்சாரு பாவம்., ஒரு லாரி டிரைவர் என்ன பண்ணுவாரு? அவர் யோசிக்க முடிஞ்ச அளவு அவ்வளவுதான்.

சேட்டு வாழ்க்கையோட கஷ்ட காலம் ஆரம்பமானது.
அடிமை வேலை பாக்குறதை விட மோசமானது., ஒரு பட்டறைக்காரன் கிட்டே தொழில் கத்துக்கறது.
வண்டி மேல கொஞ்சம் தூசு  இருந்தா கூட கன்னம் பழுத்துடும்.
காலைல எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினா, ராத்திரி வர்றதுக்கு மணி ஒன்பது பத்து-ன்னு ஆயிடும்.

பட்டறைக்கும், வீட்டுக்கும் கிட்டத்தட்ட நாலஞ்சு கிலோ மீட்டர் இருக்கும். ராத்திரி ஒரு தெருவை கடக்கரதுக்கு மட்டும் சேட்டு ரொம்ப கஷ்டப் படுவான்.
அங்கே ஒரு  கருப்பு நாயி அவனைப் பாத்தா மட்டும் ரொம்ப குரைக்கும்...
அந்த நாயிக்கு பயந்துட்டே, சேட்டு ஒரே ஓட்டமா, வீட்டுக்கு ஓடுவான்.
ரெண்டு கிழிஞ்ச டிராயர், நாலு அழுக்கு பனியன். இதைத் தவிர அவனுக்கு அடுத்த தீபாவளி வரைக்கும் வேற எந்த துணியும் கிடைக்காது.

அப்பா, எவ்வளவோ கஷ்டப் பட்டாலும், பசங்க வயித்துக்கு குறை வைக்கல. வீட்டுல எப்போ போனாலும் சாப்பாடு கிடைக்கும்.
பையன் கஷ்டப் படுறதைப் பார்த்து அம்மா ரொம்ப வருத்தப் படுவாங்க. 

அதுக்குன்னே., சேட்டு, பட்டறைல நடக்குறத, வீட்ல சொல்ல மாட்டான்.
அன்னிக்கு ஒரு நாள் அப்படிதான், நைட் பத்து மணிக்கு மேல ஆகியும், ஏதோ அவசரமா டெலிவரி கொடுக்கணும்ன்னு, ஒரு வண்டிய வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அப்போ சேட்டு, மெக்கானிக் பக்கத்துல உட்காந்துட்டு, குண்டு பல்பை பிடிச்சிகிட்டு இருந்தான்.
மத்தியானம் ஒரு மணிக்கு சாப்புட்டது. நைட் பத்து மணிக்கு மேலயும் வீட்டுக்கு போகாம இருந்ததால, பசி மயக்கம் வேற. லேசா கண்ணசந்துட்டான்... அவ்வளவுதான். மெக்கானிக்-க்கு வந்தது பாருங்க கோவம். கைல வச்சிருந்த குண்டு பல்ப்பாலையே கன்னத்துல சூடு வச்சான்.

வீட்டுக்கு தெரிஞ்சா வேலைய விட்டு நிறுத்திடுவாங்க. அப்புறம் தொழில் கத்துக்க முடியாது. அப்படின்னு பையன் பயந்துகிட்டே, அன்னிக்கு நைட் பட்டறையிலேயே படுத்துகிட்டான்.

காலைல எந்திரிச்சு பாத்தா, சூடு வச்ச இடத்துல கன்னிப் போயிருந்தது. கொப்புளத்த அமுக்கி சீயை எடுத்துட்டு, அதுக்கு மேல கிரீஸ் அப்பிக்கிட்டு வீட்டுக்கு போனான்.

இந்த மாதிரி நடந்த (இந்த நாட்களில் வாழும் சேட்டு-களுக்கும்  நடக்குற) கொடுமைகள் எக்கச்சக்கம்.

அப்பா லாரி ஓட்ட போயிடுவாரு. போனா வர்றதுக்கு ரெண்டு வாரம், மூனு வாரம்-ன்னு ஆகும். ஒரு சில முறை வரும்போது, கொஞ்சம் காசு அதிகமா இருந்தா, பசங்களுக்கு துணி எடுத்துக் கொடுப்பாரு. மத்த எல்லா காசையும் அம்மா கைல கொடுத்துடுவாரு.
அம்மாவுக்கோ சேர்த்து வைக்க தெரியாது. எவ்வளவு காசு கொடுத்தாலும் அதை வீட்டுக்காக செலவு செஞ்சிடுவாங்க. நிறையா சாப்பாடு செஞ்சு அதை அடுத்த நாள் கீழே கொட்டிடுவாங்க.
இன்னைக்கு கூட, அவங்க வீட்டுக்கு போனா, கண்டிப்பா சாப்பாடு கிடைக்கும். எப்பவுமே நிறையாதான் செய்வாங்க. சேட்டு குழந்தையா இருந்தப்போ, அது கூட்டுக் குடும்பம் வேற. அதனால, எப்பவுமே சட்டி நிறையாதான் செய்வாங்க. அதே அவங்களுக்கு இன்னைக்கு வரைக்கும் பழக்கமா இருக்கு.
அக்கா பத்தாவதுக்கு மேல படிக்கல. வயசுக்கு வந்தவுடனே, பொண்ணுங்கள வீட்டை விட்டு வெளிய அனுப்பறது, அந்த காலத்துல (இன்னும் ஒரு சில இடங்களல்ல இப்பவும்) தப்பு-ன்னு நினைச்சு வீட்டோடையே நிறுத்திட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஒரு சொந்தக் கார பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க.
அண்ணன் வண்டிக்கு கிளீனரா போனான். அப்புறம், கொஞ்ச நாள் கழிச்சு, டிரைவிங் கத்துகிட்டு, டிரைவர் ஆக ஆரம்பிச்சான்.

சேட்டுவும் ஒரு குட்டி மெக்கானிக் ஆனான்.
வாழ்கை எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. அப்பாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியாம போனது. இதுக்கு மேல வண்டி ஓட்டக் கூடாது-ன்னு டாக்டர் சொல்லிட்டாரு. சரி-ன்னு லாரி புக்கிங் ஆபீஸ் வைச்சாங்க. அதுல ஓரளவுக்கு வருமானம் வந்தது. அப்பாவுக்குத் துணையா அண்ணனும் வந்து ஆபிசை பாத்துக் கிட்டாங்க.
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அண்ணனுக்கு கல்யாணம் பண்ணினாங்க. அண்ணி மாதிரி ஒரு நல்ல பொண்ணு அந்த ஊருலயே கிடையாது. அண்ணன் எவ்வளவுதான் குடிச்சிட்டு வந்து, அடிச்சு ரகளை பண்ணினாலும் பொறுமையா வீட்டைப் பார்த்துகிட்டாங்க.
சேட்டுவும் கொஞ்ச நாளிலேயே பெரிய பையன் ஆனான். அண்ணன் மாதிரியே நானும் ஆபிசுக்கு போகணும்-ன்னு அப்பா கிட்டே சொன்னனான். அதனால, அவனுக்கும் பின்னாடி ஒரு ஆபிஸ் வச்சு கொடுக்கலாம்-ன்னு முடிவு பண்ணி, வேற ஒரு லாரி புக்கிங் ஆபிஸ்ல வேலைக்கு  சேர்த்து விட்டாங்க.
தம்பி எப்பவும் கொடுத்து வச்சவன். அவனை மட்டும் அவங்க ஆபிஸ்லையே  தொழில் கதுக்கிட்டும்-ன்னு விட்டுட்டாங்க.

17 வயசு இருக்கும்போது லேசா அரும்பிய மீசையோட நம்ம சேட்டு, உண்மையாலுமே ஒரு சேட்டு ஆபீஸ்ல வேலைக்கு இருந்தான். லாரி ஒனருங்களுக்கும், சரக்கு ஒனருங்களுக்கும் இடைல தரகர் வேலை செய்யுறதுதான் "லாரி புக்கிங் ஆபிஸ்" 
அதுக்கு தேவையான முதன்மைத் தகுதி பொய் சொல்லணும்... சொல்லியே ஆகணும்.. இல்லாட்டி கமிசன் கிடைக்காது. 
ரெண்டாவது தகுதி ஆளுங்களை எடை போடணும்... பல தரப்பட்ட ஆளுங்களையும் சீக்கிரமா எடை போடணும்., 
மூனாவது தகுதி ஆளுங்களுக்குத் தகுந்த மாதிரி பேசணும்., 
-இந்த மூனு தகுதிகளும்., நம்ம சேட்டுகிட்டே மொதல்ல இல்ல., அப்புறம் நாளாக, நாளாக, வந்து ஒட்டிகிச்சு... அதுதான் அவனுக்கு சோறு போட ஆரம்பிச்சிச்சு.

கடவுள் எந்த வயசுப் பசங்களுக்கும் பொண்ணுங்க விசயத்துல குறை வச்சது இல்ல.. அவங்களோட மனசைக் கலைக்கறதுக்குன்னே அவவவனுக்கு அழகழகா தெரியுற மாதிரி பொண்ணுங்களை படிச்சு வச்சிருக்கார்... ஆனா அவரோட முயற்சி நம்ம சேட்டு விசயத்துல கொஞ்சம் தோல்வி அடைஞ்சதாவே நான் நினைக்குறேன்...

நம்ம சேட்டு, சேட்டு ஆபிஸ்ல இருந்து ஒரு சில தஸ்தா-வேஜ்-களை கொடுக்கறதுக்காக வேற ஆபிஸ்-களுக்கும், சில ஞாயிற்றுக் கிழமைகளில் அவங்க வீட்டுங்களுக்கும் போக வேண்டி இருந்தது.
அப்பிடி போக நேரிடுகைல., நம்ம சேட்டு ஒரே ஒரு சேட்டு வீட்டுக்கு மட்டும் போக கொஞ்சம் தயங்குவான்... அது தான் நம்ம ரேஷ்மா டிரான்ஸ்போர்ட் சேட்டு வீடு.

நம்ம சேட்டு எப்போ போனாலும், ரேஷ்மா அவனை சீக்கிரம் போக விட மாட்டா... பேனா கேட்டா, பேனாவை கொடுக்குற மாதிரி கொடுப்பா., சேட்டு ஒரு முனைய பிடிச்சவுடனே., மறுமுனைய விடாம விளையாடுவா...

தண்ணி கொடுப்பா, ஆனா சேட்டோட சட்டைய லைட்டா நெனைச்சிடுவா...
ரேஷ்மா ட்ரான்ஸ்போர்ட்ஸ்-ம் நம்ம சேட்டு வேலை பாக்குற ட்ரான்ஸ்போர்ட்ஸ்-ம்  தொழில் ரீதியா நெருக்கம் ஏற்பட்டதால நம்ம சேட்டு ரேஷ்மா வீட்ட்க்கு அடிக்கடி போக நேரிட்டது.

சேட்டு விலகி விலகி போனதாலேயோ என்னமோ, ரேஷ்மா-வுக்கு சேட்டு மேல பைத்தியம் முத்திகிட்டே வந்தது.. சேட்டு பாக்குறதுக்கு நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி சாதாரணமா இருப்பான். ஆனா ரேஷ்மா ரொம்ப அழகா இருப்பா.. ரொம்ப அழகான பொண்ணுங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய சாபம் இருக்கறதா நான் சந்தேகப் படுறேன்.. அவளுங்களுக்குத் தகுந்த அழகுடைய பையனை அவங்க கண்டிப்பா விரும்பறது இல்ல. நூத்துக்கு என்பது கேஸ் அப்படித்தான் இருக்கு.

ஒரு நாள், நம்ம சேட்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்-ன்னு ரேஷ்மா ஒரு லவ் லெட்டர் எழுதி கொடுத்தா.. 
நம்மாளுதான் நாலாவதையே தாண்டலையே.. அவனுக்குத் தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச தமிழ் எழுத்தும் அந்த காகிதத்துல இல்ல... எப்படி படிச்சும் ஒன்னும் புரியல.. இருந்தாலும் அதுல என்ன எழுதி இருந்துச்சு-ன்னு அவனால யூகிக்க முடிஞ்சது... 

நம்ம சேட்டு எப்பவுமே முத்து படத்துல வர்ற திருந்தின ரஜினிகாந்த் மாதிரி மாதிரி தான் ரேஷ்மா கிட்டே நடந்துக்குவான்.
.....
டிங் டாங்...
பௌர்ணமி நிலவு, அதுவும் ரோஸ் பவுடர் போட்ட நிலவு வந்து கதவைத் திறந்தது..
அந்த அழகை ரசிக்க நம்ம சேட்டு-க்கு கொடுத்து வைக்கல.. மூஞ்சிய எங்கேயோ வச்சுகிட்டே,

KA பதினொன்னு பதினாறு வண்டி-க்கு எப் சி போட்டாச்சா-ன்னு  கேட்டுட்டு வர சொன்னாங்க.. இன்னைக்கு சாயிந்திரம் லோடு இருக்குதாம்..
எங்க வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க.. எனக்கு உடம்புக்கு முடீல-ன்னு நான் மட்டும் இங்கேயே இருந்துட்டேன்..

எந்த பதிலும் சொல்லாம இடத்தைக் காலி பண்ணினான்...
அவ அப்பன் வீட்ட இருக்கறப்போவே என் சட்டைய நெனைச்சிடுவா.. இன்னைக்கு யாருமே இல்ல...
கேக்கவா வேணும்? ஆழ விட்றா சாமி.. -ன்னு மனசுல ஒரு எண்ணம் ஓடியது.

ஒரு நிமிஷம்...
ஹையையோ...தொலைஞ்சது போ.. இன்னைக்கு நான் தீந்தேன்..
திரும்பி நடக்க ஆரமித்தவன்., மறுபடியும் வந்து அதே பொசிசன்-ல வேற எங்கியோ பாத்துட்டு நின்னான்..

என்னை உனக்கு பிடிக்கலையா..?

திடீர்-ன்னு அடி வயித்துல யாரோ புளித் தண்ணி ஊத்தின மாதிரி இருந்துச்சு.. எலெக்ட்ரிக் ஷாக் அடிச்சா மாதிரி ரேஷ்மாவைப் பார்த்தான்... என்ன நினைச்சானோ தெரியல,
என்னக்கு வேலை இருக்கு நான் போகணும்-ன்னு சொல்லிட்டு நடைய கட்ட ஆரம்பிச்சான்.

பஞ்சு மாதிரி ஒரு கை அவனோடை மணிக்கட்டைப் பிடிச்சு நிறுத்தியது..

நில்லு நான் உன்கிட்டே பேசணும்..
என்ன பேசணும்?

நிறையா பேசணும்...
சீக்கிரம் சொல்லு எனக்கு நிறையா வேலை இருக்கு..

இல்ல முடியாது., எனக்கு நிறையா பேசணும்..
சரி சொல்லு...

உள்ளே வா..
வர மாட்டேன்..

உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.. என் மேல சத்தியம்.. உள்ளே வா..
ரெண்டு பேரும் வீட்டு நடைல வந்து உட்காந்தாங்க...

உனக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காதா?
.........

நான் உன்னைய ரொம்ப லவ் பண்றேன்..
......

எந்த ஒரு பையனும் ரொம்ப ஆவலா எதிர்பாக்குற தருணம் இது... ஆனா, நம்ம சேட்டு இதை ஒரு வகைல எதிர்பாத்திருந்தான்.. அதுக்கு என்ன பதில் சொல்லணும்-ன்னு யோசிச்சு வச்சிருந்தான்...

சினிமா படங்கள்ல வர்ற மாதிரி, நீ கொஞ்ச காலம் காத்திரு., நாம அப்புறமா கலியாணம் கட்டிக்கலாம்-ன்னு எல்லாம் வசனம் பேசுல...

நான் இங்கே எழுதிட்டு இருக்குறது., உண்மைச் சம்பவம்... 
ஒரு சேட்டு வீட்டுப் பொண்ணை., காதலிச்சு கல்யாணம் பண்றது ஜெமினி படத்துல வர்ற மாதிரி ரொம்ப சுலபம் இல்ல., 
வீட்டு நிலைமை, சொந்த நிலைமை, நடைமுறை சாத்தியம் எல்லாத்தையும் மனசுல வச்சு, பொண்ணு நல்லா இருக்கா-ன்னு பல்லை இளிக்காம., சொந்த வாழ்க்கைல முன்னேறனும்-ன்னு ஒரு முடிவு எடுத்தான்...
(கருமம், எத்தன தடவ சுட்டு போட்டாலும், எனக்கு  இந்த பக்குவம் வர மாட்டேங்குது..)

சொந்தமா ஆபீஸ் வைக்கணும்-ன்னு ஒரு வெறி ஏற்கனவே அவன் மனசுல இருந்தது... அதே நேரத்துல அவனோட அப்பாவுக்கும் உடம்பு சரியா இல்ல., அதனால, அவன் அண்ணனுக்கு உதவியா இருக்கணும்-ன்னு சேட்டு ஆபீசை விட்டுட்டு., அவன் அண்ணன் கிட்டேயே வேலைக்கு சேர்ந்தான்.
ரேஷ்மா-வுக்கு என்ன பதில் சொன்னானோ-ன்னு உங்க மனசு துடிக்கறது எனக்கு இங்கே கேட்குது.,

மௌனம்..

வேற எதையும் அவனால கொடுக்க முடியல, சொல்றத புரிஞ்சுக்கற அளவுக்கு அவளுக்கும் பக்குவம் இல்ல...

பழைய சொந்தம் விட்டுப் போவக் கூடாதுன்னு ஒரு கிழவி அவளோட அத்தை மவனுக்கு (நம்ம சேட்டுவோட அப்பா) ஆள் அனுப்புச்சி.. 

டேய்., என் பேத்திய உம்மவனுக்கு கட்டிகோடா..
பெரியவங்க பேச்சை கேட்ட யாரும் வீணாப் போனதா சரித்திரம் சொல்லல.. அவரும் சரி-ன்னுட்டாறு...
சேட்டு-க்கு அப்போ 19 வயசு.. அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கல.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்-ன்னு சொல்லிப் பார்த்தான்.. இருந்தாலும் ரேஷ்மா நெனப்பு மனசுல வரக் கூடாது-ன்னு சரி-ன்னு ஒத்துக்கிட்டான்.

எல்லாம் போகட்டும், மாப்பிள்ளைக்கே வயசு பத்தொன்பது.. அப்போ பொண்ணுக்கு?
ரொம்ப சரியான கணிப்பு. பதினாலு.
பள்ளிக் கூடத்துலேயே ரொம்ப நல்லா படிக்கற பொண்ணு.. அப்பாவும் சர்கார் உத்தியோகம்.. அம்மாவும் சர்க்கார் உத்தியோகம்.. இருந்தாலும் கிழவி பேச்சை மீற முடியல...

அடுத்த சுப முகூர்த்தத்துல இந்த ரெண்டு குழந்தைங்களுக்கும் கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சது..

இதுக்கு மேல நம்ம விக்ரமன் படம் மாதிரி., ரெண்டு மூனு வருஷம் கஷ்டம்., அப்புறம் குழந்தை.,
அப்புறம் சொந்த தொழில் தொடங்கி., கொஞ்ச கொஞ்சமா காசு சேர்த்தி ஒரு வீடு வாங்கி., அப்புறம் இன்னொரு குழந்தை..
அப்புறம் சொந்தமா ரெண்டு லாரியையும் வாங்கி இப்போ சுமூகமா வாழ்கை ஓடுது...

நான் தான் படிக்கல.. 
நான் நல்லா படிச்சும் என்னை பெரியவங்க படிக்க வைக்கல.. 
நீதாண்டா கண்ணு நல்லா படிச்சு பெரிய ஆள் ஆகணும்-ன்னு சேட்டு பொண்டாட்டி தினமும் அவ பையனுக்கு சொல்லிட்டு இருக்கா. அவனும் இப்போ பத்தாங்க்ளாஸ் போறான்.

திரும்பிப் பாக்கறதுக்குள்ள உருண்டு ஓடுது வாழ்க்கை..

ரேஷ்மா-வை ராஜஸ்தான்-ல கட்டிக் கொடுத்தாங்களாம்., அவளுக்கு அவளை மாதிரியே ஒரு பொண்ணு இருக்குறதா கேள்வி..

சிவகாமியை காதலிச்சும் கல்யாணம் பண்ண முடியாம போன மாமல்லர் மாதிரி தினமும் ஒரு வைராக்கியத்தோட போறாரு அவரோட சொந்த ஆபீசுக்கு..

தொடருமா? முற்றுமா?....
நான் சொன்ன இந்த வரலாறு ஒரு நல்ல மனிதனோட முப்பத்தி ஆறு வருஷ வரலாறு..
அவரோட கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப் பட்டுதான் முன்னேறி இருக்காரு.,
அவரு பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லி உங்களை கலங்கடிக்க விரும்பாத காரனத்தினால.,
இதுவே போதும்-ன்னு இங்கேயே நிறுத்திக்கறேன்..


















No comments: